BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Saturday, July 4, 2009

photoshop

Monday, December 22, 2008

இலங்கையின் முதலாவது தேசிய இயக்கத்தை உருவாக்கிய சேர் பொன். அருணாசலம்

இன்று இலங்கையின் 60 ஆவது சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இச்சுதந்திரத்திற்கு ஆரம்ப வித்தாக இருந்தவர் சேர் பொன். அருணாசலம். அவர் ஒரு தமிழர் என்பதால் பெரியளவிற்கு இன்று முக்கியத்தவப்படுத்தப்படுவதில்லை.
இலங்கைக்கான அனைத்து சமூகங்களையும் இணைத்து ஒரு தேசிய இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு சேர் பொன். அருணாசலம் மேற்கொண்ட முயற்சிகள் பாரியவை.
1913 ஆம் ஆண்டு அரசாங்க சேவையில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அரசியலில் அருணாசலம் ஈடுபடத் தொடங்கினார்.
அவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து உருவாக்கிய முதல் அமைப்பு "சமூக சேவைச் சங்கம்" இச்சங்கத்தினூடாக அடி நிலை மக்களின் மேம்பாட்டிற்கு உழைத்தார். சமூகசேவைச் சங்கம் `1915 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதி' உருவாக்கப்பட்டது.
1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 திகதி கொழும்பு விக்டோரியா மொ.சோனிக் மண்டபத்தில் சமரவிக்கிரம தலைமையில் நடைபெற்ற ஈ.ஜே. இலங்கைத் தேசிய சங்கத்தின் வருடாந்த மாநாட்டில், "எங்கள் அரசியற் தேவைகள்" என்ற தலையங்கத்தில் பேசுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பினை விடுத்தவர் லேக்கவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் ஸ்தாபகரும் இலங்கைத் தேசிய சங்கத்தின் செயலாளருமான டி.ஆர்.விஜயவர்த்தனா ஆவார்.
இலங்கைத் தேசிய சங்கம் 1988 இல் சிங்கள கரவா சமூகத்தினால் உருவாக்கப்பட்ட சங்கமாகும். ஜேம்ஸ்பீரிஸ், எல்.ஆர்.சேனநாயக்கா (டீ.ரு.சேனநாயக்காவின் சகோதரர்) போன்றவர்கள் இச்சங்கத்தினை அமைப்பதில் முன்நின்றனர்.
அருணாசலம் இக்கூட்டத்தில் பேசும்போது, "பணிக்குழு ஆட்சியாளரின் சங்கிலித் தலைகளால் பிணிப்புற்று நாங்கள் எங்கள் அதிகாரம், பொறுப்பு என்பன அற்றவர்களாய் எங்கள் இயல்பு, திறமை ஆகியன குறைக்கப்பட்டவர்களாய் தற்குறை உணர்வினால் ஏற்பட்ட விரக்தியினால் நலிந்து வாழுகின்றோம். எங்கள் சொந்த இயல்பில் நாங்கள் பூரணமாய் வளருவதற்கு விடாமல் எங்களைப் பணிக்குழு ஆட்சியாளரின் பரிபாலனம் தடை செய்கின்றது. குடியேற்ற நாட்டு முறையின் கீழ் இலங்கையில் நிலவுகின்ற ஆட்சி எங்கள் கழுத்தை நெரிக்கின்றது" என்றார். (பணிக்குழு ஆட்சி நிர்வாக அதிகாரிகளின் ஆட்சி) சுதந்திர வேட்கை உருவாகும் வகையில் பேசிய தனது உரைக்கு ஆதாரமாக பல்வேறு புள்ளி விபரங்களையும் பயன்படுத்தினார். இவரது இந்தப் பேச்சை மெச்சிய தேசியச் சங்கத் தலைவர்களுள் ஒருவரான ஜேம்ஸ் பீரிஸ், "சேர் அருணாசலம் பேசிய பின்னரே, இலங்கையர் தன் நம்பிக்கையுடன் விடாக் கண்டர்களாக அரசியற் கிளர்ச்சி செய்தல் வேண்டும் என உறுதி கொண்டனர்" என்றார்.
இவ்வுரையின் உந்துதலினாலேயே 1917 மே மாதத்தில் சட்டத்தரணிகள் சங்க நிலையத்தில் சட்டத்தரணிகள் பலரைக் கொண்டு "இலங்கைச் சீர்திருத்தக் கழகம்" உருவாக்கப்பட்டது.
இவ் அமைப்பினூடாக, அரசியற் சீர்திருத்தத்திற்கான கோரிக்கைகளை அருணாசலம் வற்புறுத்தினார். அவரது முழு இலக்கும் சுயராச்சியக் கோரிக்கையாகவே இருந்தது.
1918 ஆம் ஆண்டு இலங்கை டெய்லி நியூஸ் பத்திரிகை தனது முதலாவது இதழை வெளியிட்டபோது, அதில் அவர் பின்வருமாறு எழுதினார். "அரசியற் சீர்திருத்தத்தை கோரும் ஆர்வத்தில் அதனையே நம் இறுதி இலக்காக கருதிவிடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எங்கள் இலக்கை அடைவதற்கு ஒரு கருவியாகவே அரசியற் சீர்திருத்தத்தில் நாம் நாட்டம் கொள்ளவேண்டும்"
இலங்கையில் இக்காலப் பகுதியில் ஐந்து அரசியல் இயக்கங்கள் பிரதானமாக செயற்பட்டன. இலங்கைத் தேசிய சங்கம், இலங்கை சீர்திருத்தச் சங்கம், இளம் இலங்கையர் கழகம், சிலாபச் சங்கம், யாழ்ப்பாணச் சங்கம் என்பனவே அந்த ஐந்துமாகும். இந்த ஐந்தையும் இணைத்து ஒரு தேசிய இயக்கத்தினை உருவாக்குவதிலேயே அருணாசலம் கவனம் செலுத்தினார். இதைவிட, முஸ்லிம் சங்கம், பறங்கியர் சங்கம் என்பனவும் நடைமுறையில் செயற்பட்டன. ஆனால், அவை சேதிய இயக்கம் ஒன்று உருவாவதற்கான செயற்பாடுகளை பகிஷ்கரித்திருந்தன.
இந்த ஐந்து அரசியல் இயக்கங்களில் இலங்கைத் தேசிய சங்கத்தையும் யாழ்ப்பாணச் சங்கத்தையும் பொது உடன்பாட்டுக்கு கொண்டு வருவதில் சிரமங்கள் ஏற்பட்டன.
தேசியச் சங்கம் இனவாரிப் பிரதிநிதித்துவத்தை அகற்றி, பிரதேசவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டு வருதல், சட்டசபையில் உத்தியோகப் பற்றற்றவர்களின் பெரும்பான்மையை அதிகரித்தல், சட்டசபையின் அதிகாரங்களை அதிகரித்தல் என்பனவற்றையே இலக்காகக் கொண்டிருந்தது.
யாழ்ப்பாணச் சங்கத்திற்கு இவ் விடயங்களில் உடன்பாடு இருக்கவில்லை. இனவாரிப் பிரதிநிதித்துவ முறையை நீக்குவதினூடாக சமபல பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என அச்சமுற்றிருந்தது. இதனால் அம்முறை தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதையே அது வற்புறுத்தியது.
ஐக்கியப்பட்ட இலங்கைத் தேசிய இயக்கமான இலங்கைத் தேசிய காங்கிரஸை உருவாக்குவதற்கான முதலாவது கூட்டம் 1917 டிசம்பர் 15 இல் நடைபெற்றது. 144 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இவர்களில் 17 பேர் தமிழர்கள், யாழ்ப்பாணச் சங்கத்தின் சார்பில் இரு பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தமிழ்த் தலைவர்கள் பின்வரும் இரு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
1. இனரீதியான பிரதிநிதித்துவம் அகற்றப்படக்கூடாது.
2. உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே சமபிரதிநிதித்துவம் இருக்கவேண்டும்.
இக்கோரிக்கைகளை அவர்கள் குடியேற்ற நாட்டுக்காரியதரிசிக்கும் அனுப்பிவைத்தனர். இலங்கைத் தேசிய சங்கம் இனவாரிப் பிரதிநிதித்துவம் அகற்றப்பட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது. ஜேம்ஸ் பீரிஸ், ஈ.ஜெ.சமரவிக்கிரம, எவ்.ஆர்.சேனநாயக்கா போன்ற தேசியச் சங்கத்தின் தலைவர்கள் இனவாரிப் பிரதிநிதித்துவத்தை கடுமையாக எதிர்த்தனர். அருணாசலம் தொடர்ந்தும், இரு தரப்பினரையும் பொதுக் கருத்திற்கு கொண்டுவர முயற்சி செய்தார். அவரைப் பொறுத்தவரை, அக்காலத்தில் சிங்களத் தலைவர்கள் மீதுள்ள நம்பிக்கையால் நியாயமானளவு பிரதிநிதித்துவத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்ற கருத்தே மேலோங்கியிருந்தது.
தமிழர்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கான ஒழுங்கு முறைகள் பற்றி சிங்களத் தலைவர்களுடன் கலந்துரையாடினார். வடமாகாணத்தில் மூன்றும் கிழக்கு மாகாணத்தில் இரண்டும் மேல்மாகாணத்தில் ஒன்றும் வரக்கூடிய வகையில் தேர்தல் தொகுதிகளை ஒழுங்கு செய்வதற்கு சிங்களத் தலைவர்கள் சம்மதித்தனர்.
இதற்கான உறுதிமொழிகளை வழங்கும் கடிதத்தினை சிங்களத் தலைவர்கள் சார்பில் ஜேம்ஸ் பீரிஸும், ஈ.ஜே.சமரவிக்கிரமவும் கையொப்பமிட்டு அருணாசலத்திடம் வழங்கினர். இக்கடிதத்தின் அடிப்படையிலேயே யாழ்ப்பாணச் சங்கத்தலைவர் ஏ.சபாபதியுடன் அருணாசலம் பேசி, தேசிய காங்கிரஸில் இணைவதற்கு யாழ்ப்பாணச் சங்கத்தை சம்மதிக்கச் செய்தார்.
1919 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி கொழும்பு நகரமண்டபத்தில் வைத்து இலங்கைத் தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது. யாழ்ப்பாணச் சங்கத்தின் சார்பில் ஏ.சபாபதியும் ஏ.கனகசபையும் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அருணாசலம் இலங்கைத் தேசிய காங்கிரஸின் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். இலங்கை மக்கள் அனைவருக்கும் தலைவராக இவர் தெரிவு செய்யப்பட்டதையிட்டு யாழ்ப்பாண சங்கத்தினர் மட்டுமல்ல, முழு இலங்கைத் தமிழர்களுமே அகமகிழ்ந்தனர்.
இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைப்பது தொடர்பாக அருணாசலம் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி சி.ஈ.கொரயா பின்வருமாறு குறிப்பிட்டார்.
"கடந்த சில வருடங்களாக சகல முயற்சிகளுக்கும் மத்தியஸ்தானமாகிய கொழும்பில், ஒரு பெரியார் ஆங்காங்கு பரந்து கிடந்த தனிப்பட்ட ஆர்வப் பொறிகள், தனித்தனியாகக் கிடந்து பிரகாசமிழந்து அணைந்து போகும் தறுவாயில் இருப்பதை கண்ணாரக் கண்டார். அப்பெருமகனார் எழுந்து விரைந்து சென்று, அப்பொறிகளை ஒன்று சேர்த்து கொழுந்துவிட்டெரியும் தமது தேசபிமான உணர்ச்சியால் அவற்றிக்கு சக்தியூட்டி, தேசிய முயற்சி எனும் பெருந்தீயாக மாற்றினார். இப்பெருந்தீயில் புடமிட்டு உருவாக்கியதே இலங்கைத் தேசிய காங்கிரஸ் ஆகும்" என்றார்.
இவ்வாறு முதலாவது தேசிய இயக்கத்தை உருவாக்கக் காரணமாக இருந்தவர் தான் பின்னர் இன அரசியலின் தோற்றத்திற்கும் காரணமாக இருந்தார் என்பது வரலாறு.
அவர் ஒரு தமிழர் என்பதால் வரலாறு அங்கு நோக்கித்தான் அவரை நகர்த்தியிருக்கின்றது.

அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக இறுதிவரை போராடிய தமிழ் அரசர்கள்

கண்டி இராச்சியம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு இன்றுடன் 192 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இலங்கைத் தீவில் தனியரசுகளாக விளங்கிய யாழ்ப்பாணத் தமிழ் அரசைப் போராட்டத்தின் பின்னர் போர்த்துக்கேயர் கைப்பற்றினர். அந்நியருக்கெதிராக இறுதிவரை போரிட்டு மாண்டவன் யாழ்ப்பாணத்துத் தமிழ் அரசன் சங்கிலியன் என்பது வரலாறு.
சுயலாபம் கிட்டும் என்ற ஆசையால் காக்கை வன்னியன் என்ற தமிழனே சங்கிலியனைப் போர்த்துக்கேயர் தோற்கடிக்கக் காரணமாயமைந்தான் என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இறுதிவரை அந்நியரை எதிர்த்து நின்ற பெருமை யாழ்ப்பாணத் தமிழ் அரசனுக்கு உண்டு.
அதேபோன்று, வன்னித் தமிழரசரும் அந்நியருக்கெதிராக போராடிய வீர வரலாறு கொண்டவர்கள். சிற்றரசாக இருந்த போதும் போர்த்துக்கேயராகவோ, ஒல்லாந்தராகவோ வெற்றி கொள்ளப்படாத பெருமை கொண்டது வன்னித் தமிழ் அரசு. இறுதியில், ஆங்கிலேயருடன் நடைபெற்ற போரில் வன்னியரசு முறியடிக்கப்பட்டது வரலாறு.
தமிழ் அரசுகள் அந்நியருக்கெதிராகப் போராடியபோது கோட்டை இராச்சியத்தை ஆண்ட சிங்கள அரசர்கள் போர்த்துக் கேயரை வரவேற்றதுடன் மட்டுமல்ல, தமது இராச்சியத்தையே அவர்களுக்குத் தாரை வார்த்தமை வரலாற்றுப் பதிவாகும்.
இவ்வாறு இலங்கையின் கரையோர இராச்சியங்கள் அந்நியராட்சிக்கு உட்பட்ட போதும் 1815 ஆம் ஆண்டு வரை கண்டி இராச்சியம் சுதந்திரமாக விளங்கியது. கண்டி இராச்சியத்தின் சுதந்திரத்தை ஆங்கிலேயர் பறித்தார்கள் என்பது வரலாற்று நிகழ்வு.
கண்டி இராச்சியத்தின் சுதந்திரத்தைப் பறித்து அந்த சுதந்திர இராச்சியத்தை ஆங்கிலேயருக்கு அடிமைப்படுத்தியதில் பெரும் பங்கு சிங்களப் பிரதானிகளையே சாரும்.
கண்டியை ஆட்சி செய்த அரச பரம்பரை நாயக்கர்கள் தமிழர்களாக இருந்தமையால் இன வெறியுடன் செயற்பட்ட சிங்களப் பிரதானிகள் சொந்த நாட்டையே அந்நியரிடம் அடிபணியச் செய்யக் காரணிகளாகினர்.
தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனப் பிழையாகட்டும் என்றபடி சிந்தித்த சிங்களப் பிரதானிகள் நாட்டை காட்டிக் கொடுத்த தேசத் துரோகிகளாகவே வரலாற்றில் பதியப்படும் தகைமை பெற்றவர்கள்.
கண்ணுச்சாமி என்ற தமிழ் இளவரசனே ஷ்ரீ விக்கிரமராஜ சிங்கன் என்ற இறுதிக் கண்டி அரசனாக விளங்கினான். இறுதிவரை ஆங்கிலேயருக்கெதிராகப் போரிட்டு சிங்களப் பிரதானிகளின் துரோகத் தனத்தால் பிடிபட்டு தென்னிந்தியாவிலுள்ள வேலூருக்கு கண்டி அரசன் நாடு கடத்தப்பட்டான். இனவெறியுடன் செயற்பட்ட, இறுதியில் சிங்கள இராச்சியமென்று மார்தட்டிக் கொள்ளும் கண்டி இராச்சியத்தை அந்நியருக்கு தாரை வார்த்துக் கொடுத்த பெருமை சிங்கள பிரதானிகளையே சாரும்.
1815 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதி ஷ்ரீ விக்கிரமசிங்கன் என்ற கண்டி இராச்சியத்தின் அரசன் ஆங்கிலேயர்களால் சிறை பிடிக்கப்பட்டான். கண்டி இராச்சியம் அன்றுடன் அழிந்தது. இலங்கைத் தீவு முழுவதும் அந்நியர் வசமானது.
இலங்கை வரலாற்றில் காக்கை வன்னியன் என்ற ஒரு தமிழனைத் தவிர, வேறு எந்தவொரு தமிழனும் சொந்த நாட்டின் துரோகியாக வரலாற்றில் பதிவாகி இல்லை.
ஆனால், கோட்டை இராச்சிய சிங்கள அரசனும், கண்டி இராச்சியத்தின் சிங்கள பிரதானிகளும் நாட்டைக் காட்டிக் கொடுத்து அந்நியருக்கு அடிமைப்படுத்திய பட்டியலில் நீண்டு செல்கின்றனர்.
இலங்கையின் தேசிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பெற வேண்டியோர் வரிசையில் யாழ்ப்பாணத்து தமிழ் அரசன் சங்கிலியனும், வன்னியின் தமிழரசன் பண்டாரவன்னியனும் கண்டியின் தமிழ் அரசன் ஷ்ரீ விக்கிரமராஜசிங்கனும் ஆவர்.
சுதந்திரத்தைப் பறிப்பதை எதிர்த்து இறுதிவரை போராடிய தமிழ் அரசர்களை நாடு மறந்து விட்டது. நாமும் மறந்து விடக் கூடாது. சுதந்திரத்தின் அர்த்தம் புரியாது சுதந்திர வீரர்களாக உலா வருவோர் ஆக்கிரமிப்புக்கு எதிராக இறுதிவரை போராடியவர்களை மறந்து அல்லது மறைத்து விடுவது வரலாற்றுக் களங்கமாகவே அமைந்து விடுகின்றது.
மார்ச் மாதம் 02 ஆம் திகதி இலங்கையின் துரோக வரலாற்றில் நினைவு நாளாக அனுஷ்டிக்கப்பட வேண்டிய ஒரு நாளாகும்

அம்பாறை மாவட்ட அரசியல் களம்

அரசியல் கிரக மாற்றங்கள் பல்வேறுவிதமான சோதிடங்களுக்கு மத்தியில் கடந்த வாரத்துக்கு முதல் வாரம் நடந்து முடிந்துள்ளது. முரண்டு பிடித்துக் கொண்டு நின்றவர்களையெல்லாம் பிடித்துக் கொண்டுவந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, இன்று அவரின் அரசுக்கு முண்டு கொடுக்க வைத்துள்ளார்.
ஆக பாம்புகளும், கீரிகளும் ஒரே பாசறைக்குள் கூடி நின்று கும்மியடிக்க வேண்டிய கால நிர்ப்பந்தம்!
தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவாக கிளிநொச்சி வரை சென்று தமிழ்ச்செல்வனைக் கண்டு பேசி வந்த பெ. சந்திரசேகரன், அவரின் பரம வைரி ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதியை மிக மோசமான பேரினவாதியாக சித்தரித்த ரவூப் ஹக்கீம், தேர்தலில் போட்டியிட முடியாமல் கடந்த காலங்களில் ஹக்கீமால் ஏமாற்றப்பட்ட மயோன் முஸ்தபா, வடக்கு - கிழக்கு பிரிப்பை பட்டாசு கொளுத்தி கொண்டாடிய அதாவுல்லா, என்றும் பிரிக்க முடியாத வட- கிழக்கை கோரும் டக்ளஸ் தேவானந்தா என்று ஏராளமான முரண்களின் தொகுப்பால் நிரம்பிக் கிடக்கிறது இன்றைய அரசாங்கம்!
ஆதரவு கொடுப்போருக்கு அன்பளிப்பு வழங்கப்போனதில் கிட்டத்தட்ட இன்று ஆட்சியிலுள்ள அனைவருமே அமைச்சர்களாகிப் போயுள்ளனர். இந்நிலை இலங்கை போன்றதொரு சிறிய நாட்டுக்கு அனைத்து வகையிலும் ஆபத்து என்கின்றன அரசியல் நிபுணர்களின் கூற்றுக்கள்!
ஆபத்து மட்டுமல்ல, தன்னை அமைச்சர் என்று கூறவே அவமானமாக உள்ளதாய் கூறுகிறார் அமைச்சர் மைத்திரிபால. அமைச்சுப் பதவியென்பது தன்னைப் பிடித்துள்ள தோஷம் என்கிறார் மற்றுமொரு அமைச்சரான டிலான் பெரேரா. (ஆனால் தன் தோஷம் கழிக்க இவர் இதுவரை பரிகாரம் எதையும் செய்யவேயில்லை). இப்படி ஆபத்தானதும், அவமானகரமானதுமான அமைச்சரவை ஒதுக்கீட்டில் அம்பாறை மாவட்டமானது 9 அமைச்சர்களைப் பெற்றுள்ளதை அரசியல் வேடிக்கையாகப் பார்ப்பதைத் தவிர வேறு வழிகளில்லை!
அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.க. நிலை.
அம்பாறை அல்லது திகாமடுல்ல - ஆண்டாண்டு காலமாக ஐ.தே.கட்சியின் ஆதிக்கத்தின் கீழிருந்த மாவட்டம். 2000 ஆம் ஆண்டின் பின்னர் சிறிது சிறிதாய் இங்கு தனது பிடியை தவற விட்டு வந்த ஐ.தே.க, தற்போது நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றத்துடன் அழிந்தே போய் விடும் என்கின்றனர் ஒரு சாரார்! ஆனால், எத்தனை பேர் பிரிந்தாலும் தமது கட்சியின் வாக்கு வங்கிக்கு ஆபத்தேதும் வந்துவிடப்போவதில்லை என்கிறார் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க! இந்த தன்னம்பிக்கையை நிச்சயம் பாராட்டவே வேண்டும். ஆயினும், "என் தலையிலிருந்து முடியெல்லாம் கொட்டினாலும், ஒருபோதும் நான் மொட்டையாகிப் போக மாட்டேன்" என்று கூறும் ஒருவரைப் பார்த்து எவ்வாறு சிரிக்காமலிருக்க முடியாதோ, அதே அனுபவம்தான் ரணிலின் குறித்த அறிக்கையை படிக்கையிலும் நமக்குள் நிகழ்கிறது.
அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தில் சுமார் 3 லட்சத்து 80 ஆயிரம் பதியப்பட்ட வாக்காளர்கள் இருப்பதாக இறுதியாக இடம்பெற்ற தேர்தல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது இம்மாவட்டத்தில் ஐ.தே.க. பெற்ற வாக்குகள் 38.98 வீதமாகும். பின்னர் 2001 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின்போது அக்கட்சி 20.87 வீதமான வாக்குகளையும், இறுதியாக 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது 14.51 வீதமான வாக்குகளையுமே பெற்றுக்கொண்டது. இவ்வாறு இந்த கட்சியின் தொடர்ச்சியான இந்த வீழ்ச்சி நிலைக்கு பல்வேறு காரணங்களை நாம் முன்வைக்கலாம்! அவைகளில் சில;
* கடந்த காலங்களில் பொதுஜன முன்னணி அரசாங்கம்/ஜனாதிபதி தொடர்ந்து ஆட்சியில் இருந்தமை.
* 2000 ஆம் ஆண்டு பொதுஜன முன்னணியுடன் இணைந்து மு.காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டமை.
* ஐ.தே.க - மு.கா. தேர்தல் ஒப்பந்தங்களின் போது அம்பா றை மாவட்டத்தில் முஸ்லிம் வேட்பாளர்களை தேர்தலில் ஐ.தே.க. நிறுத்தக் கூடாது எனக் காணப்பட்ட உடன்பாடு.
* ஐ.தே.க வின் மிக முக்கியமான முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் (எஸ்.எஸ்.பி. மஜீத் போன்றவர்கள்) பலர் கட்சியை விட்டுப் பிரிந்து, மு.கா.வுடன் இணைந்து செயற்பட்டமை.
* பொதுஜன முன்னணியுடன் இணைந்து பல முஸ்லிம் பா.உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட்டு (அதாவுல்லா, பேரியல்) அதிக வாக்குகளை பெற்றமை என்று, இவைபோன்ற பல்வேறு நிகழ்வுகளும், விடயங்களும் அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.க.வின் வளர்ச்சியில் பாதிப்பினையும், அதன் வீழ்ச்சிக்கு வழிகோலவும் செய்தன.
தற்போது ஐ.தே.க.விலிருந்து அரசின் பக்கமாக பிரிந்து சென்றவர்களில் அம்பாறை மாவட்டம் சார்பானவர்கள் இருவர்! அவர்களில் ஒருவர் பி. தயாரட்ண, அடுத்தவர் மயோன் முஸ்தபா.
மிக நீண்ட காலமாக ஐ.தே.க. சார்பாக பா.உறுப்பினராய் தேர்வாகி வருபவர் பி.தயாரட்ண. இவர் அம்பாறை மாவட்ட ஐ.தே.க. சம்மேளனத் தவிசாளரும் தேசிய ரீதியான அதி உயர் குழு உறுப்பினருமாவார். மயோன் முஸ்தபா கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர், தேசிய செயற் குழு உறுப்பினர் மற்றும் பா. உறுப்பினர்! ஆக இவர்கள் இருவரின் பிரிவும் கட்சிக்கு மாவட்ட ரீதியில் பாதிப்பு எதையும் ஏற்படுத்தாது என்று கூறினால், எவர் நம்புவார்?! ஒருவர் நம்மோடு முரண்பட்டுப் பிரிந்து சென்றால் பிரச்சினை ஒன்றுதான். ஆனால், பிரிந்து சென்றவர் எதிர்த் தரப்போடு இணைந்து கொண்டால் பல்வேறு பிரச்சினைகள்!
கட்சிக்கு அப்பால் ஒருவரின் தனிப்பட்ட, அரசியல் ஆளுமைகளுக்காக மக்கள் அவரை நேசித்து தேர்தல்களின்போது வாக்களிப்பதுண்டு. ஐ.தே.க.வை விட்டு பிரிந்து சென்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கி தேர்தல்களில் மாபெரும் வெற்றிபெற்றமைக்கு அவரின் தனிமனித ஆளுமையும் ஒரு காரணம் எனலாம்!
ஆக - அரசுடனான ஐ.தே.க. பா. உறுப்பினர்களின் இணைவு பொதுவாக அதன் வாக்கு வங்கியில் பாதிப்பினையும் குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் மேலும் வீழ்ச்சியினையும் ஏற்படுத்தும் என்றே கணிக்க முடிகிறது!
சேர்ந்தோர்களுக்கிடையிலான பிரிவுகளும், பிணக்குகளும்!
அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை அங்கு எதிர் அரசியல் புரிந்து வந்த பலரும் இப்போது அரச தரப்புக்கு தாவியுள்ளனர். ஏற்கனவே அரசோடு இருந்து வந்த அதாவுல்லா, சேகு இஸ்ஸதீன், பேரியல் மற்றும் அன்வர் இஸ்மாயில் போன்றோருடன் பொருதுவதற்கான அதிகாரங்களையும், பலத்தினையும் அரசுடன் மு.கா. இணைந்ததன் மூலம் தற்போது பெற்றுக் கொண்டுள்ளது. இனி அங்கு அரசியல் போர் உக்கிரமாகும். அதிகாரமற்ற நிலையில் முன்பு களங்களில் பின்வாங்கிக் கொண்டிருந்த மு.கா.வினர் இனி நேரடியாக மோத முற்படுவர். இந்நிலை அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸுக்கும் மு.கா.வும் இடையிலேயே அதிகம் நிகழக் கூடும் என்பதால் அக்கரைப்பற்று சம்மாந்துறை மற்றும் அட்டாளைச்சேனைப் பிரதேசங்களில் மிக வன்முறையான அரசியல் களங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளன!
இவை தவிர, ஐ.தே.க.விலிருந்து அரசுக்கு மாறியுள்ள மயோன் முஸ்தபா எதிர் காலத்தில் எந்த அணியினருடன் தேர்தல் கூட்டினை வைக்கப் போகிறார் என்பதும் சுவாரஸியமான தேர்தல் திருப்பங்களை ஏற்படுத்த வழிவகுக்கும்! தற்போதைய அவதானங்களின் படி, மு.கா.வுடன் மயோன் அரசியல் ரீதியான உறவுகள் எதனையும் ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஐ.தே.க. சார்பாக ரணில் செய்த மிகப் பெரும் தவறு, தேர்தல்களின் போது தனது கட்சி சார்பாக முஸ்லிம் உறுப்பினர்களை போட்டியிட வைக்காமல், மு.கா.வின் அபேட்சகர்கள் மட்டுமே போட்டியிடுவதற்கு இணங்கிக் கொண்டமையாகும். இதன் மூலம் மு.கா. வளர்ச்சி பெற்ற அதேவேளை, ஐ.தே.க. முஸ்லிம் பகுதிகளில் மிக மோசமான வீழ்ச்சியினையும் சந்திக்க நேர்ந்தது! இவ்வாறான நிலையொன்று ஏற்பட மஹிந்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். குறிப்பாக அதாவுல்லா இது போன்றதொரு தேர்தல் கூட்டினை ஏற்படுத்த விரும்பவே மாட்டார். இன்னும் கூறினால், மு.கா.வின் பலம் மிகத் திட்டமிடப்பட்டு அடுத்த தேர்தல்களின்போது முடக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் அரச ஆசீர்வாதத்துடன் நிகழ்த்தப்படும் என்கின்றனர் அவதானிகள்!
ஆக, பிரிந்து நின்றவர்கள் எல்லோரும் ஒரே தரப்புக்கு வந்து விட்டதாக எவரும் சந்தோஷம் கொள்ள முடியாது. முதுகுகளுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டுள்ள அரூப வாட்களோடு இனி நமது அரசியல் அரங்கில் எம்.ஜி.ஆர்.களும், நம்பியார்களும் பரபரப்பாக மோதிக் கொள்வார்கள்!
ஆக - ஆரவாரங்களுக்கு இனி குறைவிருக்காது!

Saturday, December 13, 2008

அரை நூற்றாண்டு அமைச்சர் அவையில் தமிழர் எத்தனை பேர்?

நண்பர் ஒருவர் எனக்கு தந்துதவிய எங்கள் பாராளுமன்ற அங்கீகாரம் பெற்ற பிரசுரமொன்றில் 1947 தொடக்கம் 1994 வரையிலான காலகட்டத்தில் பதவியேற்ற வெவ்வேறு அமைச்சர் அவைகளில் இடம்பெற்ற மந்திரிமார்களின் பெயர்கள் தரப்பட்டிருந்தன. அவற்றுள் இடம்பெறும் தமிழ் அமைச்சர்களின் விபரங்களை இங்கு வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
1947 - 1952 டி.எஸ்.சேனநாயக்கவின் அமைச்சர் அவை (04.02.1948 - 30.03.1952)
சி.சிற்றம்பலம் - தபால், தொலைத் தொடர்பு அமைச்சர்.
சி.சுந்தரலிங்கம் - வணிக, வியாபார அமைச்சர்.
ஜீ.ஜீ.பொன்னம்பலம் - (1948 ஆம் ஆண்டு கடைசி மாதங்களில் இருந்து) தொழிற்துறை, தொழிற்துறை ஆராய்ச்சி, மீன்பிடி அமைச்சர்.
1952 - 1953 டட்லி சேனாநாயக்கவின் அமைச்சர் அவை
(30.03.1952 - 19.06.1952) (19.06.1952 - 11.10.1953)
வி.நல்லையா - தபால், செய்தித்துறை அமைச்சர்.
எஸ்.நடேசன் - (திரு. நல்லையா 1952 ஜூலை 12 ஆம் திகதி இராஜிநாமா செய்ய அவர் இடத்திற்கு நியமிக்கப்பட்டார்) தபால், செய்தித்துறை அமைச்சர்.
ஜீ.ஜீ.பொன்னம்பலம் - தொழித்துறை, மீன்பிடி அமைச்சர்.
1953 - 1956 சேர் ஜோன் கொத்தலாவலவின் அமைச்சர் அவை (12.10.1953 - 11.04.1956)
ஜீ.ஜீ.பொன்னம்பலம் - தொழில்துறை, மீன்பிடி அமைச்சர்.
செனட்டர் சேர் கந்தையா வைத்தியநாதன் - அன்று ஜீ.ஜீ.இராஜிநாமாச் செய்ய அவர் இடத்திற்கு நியமிக்கப்பட்டார். இவர் செனட் சபையில் இருந்து தெரிவு செய்யப்பட்டார். மக்களால் தெரிவு செய்யப்படவில்லை. - வீடு, சமூகநலன் அமைச்சர்
எஸ்.நடேசன் - தபால், ஒலிபரப்பு அமைச்சர்.
1956 - 1959 எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் அமைச்சர் அவை
முதல் அமைச்சர் அவை (12.04.1956 தொடக்கம் 09.06.1959 வரை) - தமிழர் எவரும் இடம்பெறவில்லை.
இரண்டாம் அமைச்சர் அவை (09.06.59 தொடக்கம் 26.09.59 வரை) தமிழர் எவரும் இடம்பெறவில்லை.
1959 - 1960 டபிள்யூ தஹநாயகாவின் அமைச்சர் அவை - தமிழர் எவரும் இடம்பெறவில்லை.
1960 - 1965 வரை - திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அமைச்சர் அவை
முதல் அமைச்சர் அவை 23.07.1960 தொடக்கம் 28.05. 1963 வரை - தமிழர் எவரும் இடம்பெறவில்லை.
இரண்டாம் அமைச்சர் அவை 28.05.1963 தொடக்கம் 11.06.1964 வரை - தமிழர் எவரும் இடம்பெறவில்லை.
மூன்றாம் அமைச்சர் அவை 11.06.1964 தொடக்கம் 25.03.1965 வரை - தமிழர் எவரும் இடம்பெறவில்லை.
1965 - 1970 டட்லி சேனாநாயக்க அமைச்சர் அவை
மு.திருச்செல்வம் - உள்ளூராட்சி அமைச்சர் - இவரின் இலங்கைத் தமிழரசுக் கட்சி 16.09.68 இல் அரசாங்கத்தை விட்டு வெளியேறியது. இவர் செனட் சபையில் இருந்து அமைச்சர் பதவி ஏற்றார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
1970 - 1977 திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அமைச்சர் அவை
செனட்டர் செல்லையா குமாரசூரியர் - தபால் தொலைத் தொடர்பு அமைச்சர். இவரும் மக்களால் தெரிவுசெய்யப்படாதவர்.
செனட் சபையில் இருந்து அமைச்சர் பதவி பெற்றார். சில காலம் இவர் வீடுகள், கட்டிட, நிர்மாணம் அமைச்சராகவும் கடமையாற்றினார்.
1977 - 1989 வரை ஜே.ஆர்.ஜயவர்தனவின் அமைச்சர் அவை.
முதல் அமைச்சர் அவை 23.07.1977 - 04.02.78 வரை
கே.டபிள்யூ. தேவநாயகம் - நீதி அமைச்சர்
இரண்டாம் அமைச்சர் அவை (04.02.1978 - 07.09.1978 (ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதியான பின்னர்)
கே.டபிள்யூ.தேவநாயகம் - நீதி அமைச்சர்
மூன்றாம் அமைச்சர் அவை (07.09.1978 - 02.1980)
கே.டபிள்யூ. தேவநாயகம் - நீதி அமைச்சர்.
சௌமிய மூர்த்தி தொண்டமான் - கிராமிய தொழிற்துறை மேம்பாட்டு அமைச்சர்.
நான்காம் அமைச்சரவை ( 02.1980 - 24.07.2987)
கே.டபிள்யூ. தேவநாயகம் - உள்நாட்டலுவல்கள் அமைச்சர்.
சௌம்யமூர்த்தி தொண்டமான் - கிராமத் தொழிற்துறை மேம்பாட்டு அமைச்சர்.
செல்லையா இராஜதுரை - பிரதேச மேம்பாட்டு அமைச்சர்.
முன்னையவரும் பின்னையவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். தொண்டமான் மலையகத்தைச் சேர்ந்தவர். வடமாகாணத்தில் இருந்து எவரும் இல்லை.
ஐந்தாம் அமைச்சர் அவை. (24.07.1987 - 30.11.1987) நான்காம் அமைச்சர் அவை போல்
ஆறாம் அமைச்சர் அவை (30.11.1987 - 18.02.1989) நான்காம் அமைச்சர் அவை போல்
1989 - 1991 இரணசிங்க பிரேமதாசவின் அமைச்சர் அவை
முதல் அமைச்சர் அவை 18.02.1989 - 30.03.1990
சௌ.தொண்டமான் - புடவைகள், கிராமிய தொழிற்துறை மேம்பாட்டு அமைச்சர்.
இரண்டாம் அமைச்சர் அவை - (30.03.1990 - 14.03.1991) முதல் அமைச்சர் அவை போல்.
மூன்றாம் அமைச்சர் அவை 14.03.1991 - ?
சௌ.தொண்டமான் - சுற்றுலா கிராமிய தொழிற்துறை மேம்பாட்டு அமைச்சர்.
மேற்கண்ட விபரங்களில் இருந்து 1991 வரையில் சுதந்திர இலங்கையில் எந்த அளவுக்கு அமைச்சர் அவையில் வட, கிழக்குத் தமிழர் பிரதிநிதித்துவம் இடம்பெற்ற தென்பதை காணக் கூடியதாக உள்ளது. தொடக்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அமைச்சர் அவையில் இடம்பெறினும் திருவாளர்கள் திருச்செல்வம், குமாரசூரியர் ஆகியோர் செனட்சபைக்கு நியமிக்கப்பட்டு அங்கிருந்தே அமைச்சர்கள் ஆக்கப்பட்டார்கள். சற்று இடம் எடுப்பதாக அமையினும் பல விடயங்களை எடுத்துக் காட்டுவதாக இப்புள்ளி விபரங்கள் அமைந்துள்ளன. உதாரணமாகப் பல காலமாகத் (12.04.1956 - 25.03.1965 வரை) தமிழர்கள் அமைச்சர் அவையில் இடம்பெறவில்லை என்பது புலனாகிறது. டி.எஸ். சேனநாயக்க கொடுத்துக் கவிழ்த்தார் என்றால் பின்வந்தவர்கள் கொடுக்காமலே கவிழ்த்து வந்துள்ளார்கள்.
இன்றைய இந்தியாவைப் போல ஒரு காலத்தில் முழு இலங்கையையும் ஒரு சிறுபான்மையினர் வழி நடத்தக் கூடும் என்று எதிர்பார்த்து டி.எஸ்.சேனநாயக்கவை அன்று நம்பியவர்கள் உள்ளூர்த் தமிழர்களோ வெளியூர் ஆங்கிலேயரோ காலக் கிரமத்தில் இன ரீதியான, மொழி ரீதியான அடிப்படைச் சிந்தனைகளே மக்கட் குழுக்களிடம் மேலோங்க வந்துள்ளது என்பதை இன்று இருந்திருந்தால் அறிந்திருப்பார்கள். கொள்கையளவில் மக்கள் பிரிவார்கள் என்று நம்பிய இடதுசாரிகளும் ஏமாற்றம் அடைந்தார்கள். மொத்தத்தில் அன்று அவர்கள் வேறுவிதமாக நம்பி இன்று நாம் அவஸ்தைப்படுகிறோம்!
ஆனால், தமிழரிடையே நோக்களவில் மட்டும் முரண்பாடு ஏற்பட்டது என்று கொள்ள முடியாதிருக்கிறது. இன்றும் பொன்னம்பலமா செல்வநாயகமா உண்மையான தமிழ்த் தலைவர் என்ற வாதம் அவர்கள் இறந்த பின்னரும் யாழ் தமிழரிடையே இருந்து கொண்டிருக்கிறது. இந்த மாயையில் இருந்து தமிழ் மக்கள் விலக வேண்டும். கொள்கை அளவில் வித்தியாசமான நோக்குகள் எங்களிடையே இருக்கலாம். ஆனால், நாங்கள் யாவரும் தமிழ் பேசும் மக்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து எங்கள் ஐக்கியத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யூதர்களைப் போல் எம்முள் வளர வேண்டும். இவ்வாறு சிந்தியாதது தமிழரின் மிகப் பெரிய பலவீனமாக அமைந்துள்ளது. தமிழ் பேசும் முஸ்லிம்களிடையேயும் அப்படித் தான். நான் கூறுவதை மற்றவர்கள் ஏற்க வேண்டும். இல்லையென்றால் நான் பிரிந்து இன்னொரு அலகை உருவாக்கினால் தான் எனக்கு மதிப்பு என்று எண்ணுகிறேன். நான் தலைவன் ஆனால், என்ன, என் சகோதரன் தலைவன் ஆனால் என்ன எங்கள் இனம் சுபிட்சம் அடைய நாங்கள் இருவரும் விட்டுக்கொடுக்க வேண்டும்" என்ற எண்ணம் வளர்ச்சி அடைந்தால் தான் இன்று இலங்கைத் தமிழரிடையே எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விடைகாண அது உதவும். முகத்தோடு பகைத்து மூக்கை அறுக்கும் பாணி எங்கள் அரசியல் கலாசாரத்தில் இருந்து நீங்க வேண்டும். ஒருவரின் அரசியல் நோக்கின் பலவீனங்களைச் சாடலாம். ஆனால், அவரை நிந்தித்து அவ்வாறு செய்யக் கூடாது. இன்று இருதுருவங்களாக இருக்கும் இளைஞர் குழாம்கள் கூட நினைத்தால் தமக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். ஆனால், பயந்தான் இதனைத் தடுக்கிறது. எங்கே மற்றவன் தன்னை இல்லாதாக்கி விடுவானோ என்ற பயம். பொதுமக்கள் பிரயத்தனம் செய்தால் புரிந்துணர்வை இவர்களுக்குள் ஏற்படுத்த முடியும். அதற்கு எங்கள் சுயநலம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பொதுநலம் மேலோங்க வேண்டும். தமிழர்களின் வருங்காலத்தை எண்ணி எங்கள் சுயநலச் சிந்தனையினைக் களைய முன்வர வேண்டும்.
சுயநலம் என்பது வெகுவாக ஒரு அடிமை இனத்திற்கே பொருந்தும். தலைமையிடம் இருந்து எனக்கு என்ன கிடைக்கும்? மற்றவனுக்கு என்ன கிடைத்து விட்டது? ஏன் அவனுக்குக் கூட எனக்குக் குறைய? என்ற பல கேள்விகளுள் மனோநிலையும் அண்டி வாழும் மக்களிடையே தான் பரவலாகக் காணப்படுகின்றன.
தலைமைத்துவத் தகைமை ஓங்கி இருக்கும் மக்களிடையே பொது நலக் கருத்துகளும் சேவை மனப்பான்மையும் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கும் மேலோங்கி இருப்பன. ஆங்கிலேயர் காலத்தில் அண்டிப் பிழைத்து வந்தவர்களின் அடியில் வந்தவர்கள் என்ற முறையிலோ என்னவோ, நாங்கள் அடிமைத் தனத்தில் ஆழ்ந்தூறியுள்ளோம்.
வெள்ளைக்காரன் எங்கள் வேலையைப் பாத்துப் பாராட்டினால் போதும், அதற்கு என் சகலதையும் நான் கொடுப்பேன் என்ற மனோநிலையில் வாழ்ந்தவர்கள் எங்கள் இடை நிலை (Middle Class) மக்கள், பல ஆயிரம் ஏக்கர் காணிகளுக்கு ஏகபோக உரிமையாளர்களாக எங்கள் தமிழ் மக்கள் இருந்ததில்லை. அப்படி இருந்திருப்பினும் அது வன்னியில் அல்லது கிழக்கிலங்கையில் தான் இருந்திருக்க முடியும். மிகக் கொடூரமான பட்டினிச் சாவை எதிர்நோக்கியும் எங்கள் மக்கள் இருந்ததில்லை.
எங்கள் இடைநிலை மக்கள் ஆங்கிலேயர் காலத்தில் கிடைத்த வேலைகளை பின்னையவர் மனங்கோணாமல் சிறப்பாகச் செய்தார்கள். அதனால் பாராட்டும் பெற்றார்கள். இன்றும் பாராட்டை எதிர்பார்க்கும் மனோநிலையிலேயே எம்மக்கள் இருக்கின்றார்கள்.
இது அடிமைத்தனம் என்று கவீரனுக்குப்படுகிறது. பொது நலத்திற்காக உண்மையான நம்பிக்கையுடன் உழைக்கும் ஒருவர் பாராட்டை எதிர்பார்த்து காரியம் ஆற்ற முடியாது. எங்கள் சிந்தனைகள் நாம் தமிழர் எமது மேம்பாடு இன்றியமையாதது; அதற்காக எனது குறுகிய நன்மைகளையும் பாராட்டுகளையும் தியாகம் செய்ய நான் பின்னிற்கமாட்டேன். என்ற முறையில் விருத்தி அடைந்தால் தான் வருங்காலம் நற்காலமாக மாறும். அதுமட்டுமல்ல, விட்டுக் கொடுக்கும், தியாகம் செய்யும் எம்மவரை அடையாளம் கண்டு பாராட்டவும் செய்வது இந்நற்குணங்களை அடையாளம் காணுவதாக அமையும். எம்முள் பிரிவினைகள் ஏற்படப்படாதென்பதற்கு எம்மால் ஆன யாவற்றையும் செய்ய நாம் பின் நிற்கலாகாது. எம்மிடையேயான பிரிவினைகள் மாற்றானையே மகோன்னத நிலையில் வைக்கும்.
மேலும் கவீரன் சரித்திர இழைகளைக் கைநழுவ விட்டுவிட்டான். அடுத்து வருவது தான் இலங்கைத் தமிழர் வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய பின்னடைவு. அதுதான் `சிங்களம் மட்டும்' சட்டம். அடுத்த கட்டுரையில் நிச்சயமாக அது பற்றி ஆராய்வோம்!

சோல்ஃபெரி அரசியல் யாப்பு

வாசகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! சுதந்திர இலங்கையின் முதல் அரசியல் யாப்புடன் புத்தாண்டை வரவேற்கிறோம்!
இன்று இலங்கைக்குப் புதிய அரசியல் யாப்புத் தயாரிக்கப் பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிரயத்தனங்கள் இழுபறியில் இப்பொழுது இருந்து வருகின்றன. அதற்குக் காரணம் பிரித்தானியரிடம் இருந்து கொக்கி போட்டோ குற்றம் இழைத்தோ (By Hook or by Crook) பெற்றுக் கொண்ட அரசாள் உரிமையைப் பங்குபோட எத்தனிப்பது நாட்டுக்கிழைக்குந் துரோகம் என்று சிங்களவர் பலர் நம்புவதே.
முதன்முறையாக எம் நாட்டுக்கென்று உள்ளூர் அரசாட்சிக்காக அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்டது சோல்ஃபெரி ஆணையாளர்களாலேயே. அதன்படி பிரித்தானிய அரசர், செனட்சபை, மக்கள் பிரதிநிதிகள் சபை ஆகியவற்றை உள்ளடக்கிய இலங்கைப் பாராளுமன்றம் நடைமுறைக்கு வந்தது. 101 மக்கட் பிரதிநிதிகளில் 95 பேர் வாக்குரிமை மூலந் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. சோல்ஃபெரி ஆணையாளர்கள் ஏற்றுக்கொண்ட அமைச்சர் அவைச் சிபார்சின் படி எல்லை நிர்ணய ஆணைக்குழுவொன்று (Delimitation Commission) மக்கட் பிரதிநிதிகளின் வாக்காளர் தொகுதிகளின் வரம்புகளை வகுக்க நியமிக்கப்பட்டிருந்தது. பொதுவாகத் தனி நபர் வாக்காளர் தொகுதிகளாகவும் சிறுபான்மையோர் பெருவாரியாக வாழ்ந்த தொகுதிகளில் பல்நபர் வாக்காளர் தொகுதிகளாகவும் இருக்க சிபார்சுகள் செய்யப்பட்டிருந்தன.
செனட் சபையில் 30 பேர் உள்ளடக்கப்பட்டிருந்தனர். ஆளுநர் 15 பேரைத் தாமே நியமிக்கவும் மற்றைய 15 பேரை மக்கள் பிரதிநிதிகள் சபை தேர்ந்தெடுக்கவும் வழியமைக்கப்பட்டது. இவர்களுள் மூன்றில் ஒரு பங்கினரான நியமிக்கப்பட்ட ஐந்து பேரும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 5 பேரும் இரண்டு வருடங்களுக்கொருதடவை ஓய்வு பெறவும் புதிதாக அவர்கள் இடத்துக்கு நியமனமுந் தேர்வும் நடக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. மக்கள் பிரதிநிதிகளின் காலம் 5 வருடங்களாக ஆக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் அவை நிறைவேற்று அதிகாரம் கொண்டிருந்தது. நியமிக்கப்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் கூடிய செல்வாக்கைப்பெற்ற நபரை ஆளுநர் பிரதம மந்திரி ஆக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. பிரதம மந்திரி தனக்குப் பிடித்தவர்களை ஆளுநர் ஊடாக அமைச்சர்கள் ஆக்கக் கூடியதாக இருந்தது. வெளிநாட்டு, பாதுகாப்பு விடயங்களில் சட்டம் இயற்றும் அதிகாரம் ஆளுநரிடமே இருந்தது. மேலும் சில விடயங்கள் ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் இருந்து வந்தன. அவற்றுள் ஒரு இனத்திற்கோ குழுவிற்கோ வழங்கப்பட்ட உரிமைகளை மற்றைய இனங்களுக்கோ குழுவினர்களுக்கோ வழங்காதிருந்தால் அவற்றைப் பரிசீலித்து மாற்று நடவடிக்கை எடுக்கும் பொறப்பு ஆளுநரிடமே இருந்தது.
புதிய யாப்பின் கீழ் 1947 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி வென்று அதன் தலைவர் ஈ.கு.சேனாநாயக பிரதம மந்திரி ஆனார். 1945 ஆம் ஆண்டில் இங்கிலாந்து சென்றபோது இலங்கைக்குத் தன்னாட்சி தரவேண்டும் என்று சேனாநாயக பிரித்தானிய அரசுச் செயலாளரிடம் கோரியிருந்தார். முதலில் புதிய அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்திய பின், சில காலத்தின் பின்னர் தன்னாட்சி தரப்படும் என்று அறிவித்திருந்தார் செயலாளர். பிரித்தானியாவில் தொழிற்கட்சி அதிகாரத்தை ஏற்றதும் அது இந்தியாவிற்குத் தன்னாட்சி தரத் தீர்மானித்தது. இது தான் சமயம் என்று, பிரித்தானியத் தொடர்பு கொண்ட அயல்நாடுகள் இரண்டிற்கு (இந்தியா, பாகிஸ்தான்) சுதந்திரம் வழங்குவதானால் இலங்கைக்கும் வழங்க வேண்டியது பிரித்தானியாவின் கடமை என்று சேனாநாயக குரல் எழுப்பினார். வேறு காரணங்களுங் காட்டப்பட்டன. அதாவது முன்னைய சாம்ராஜ்ய அரசியல் யாப்புகள் அனைத்தும் இலங்கையர்களால் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், இரண்டு உலக யுத்தங்களின் போது இலங்கை பிரித்தானியாவுடன் தோளோடு தோள் நின்று உதவியது என்றும், இலங்கையின் எழுத்தறிவுத் தகைமை இந்தியாவை விட மேம்பட்டது என்றும், காந்தி, நேரு போன்ற இந்தியத் தலைவர்கள் சர்வதேச அளவில் போற்றப்பட்டவர்கள். எனினும், இலங்கையர்கள் தமது வாக்குரிமையை 16 வருடகாலமாகப் பாவித்து வந்துள்ளனர் என்றும் இந்தியர் 1947 வரை அதனைப் பாவிக்கவில்லை என்றும் அதனால் தன்னாட்சிக்கு இலங்கை மக்கள் இந்தியர்களிலும் பார்க்கக் கூடிய தகைமையுடையவர்கள் என்றும் எடுத்துக்காட்டப்பட்டது. இக்காரணங்கள் இலங்கையர்களுக்குச் சாதகமாகவே ஏற்கப்பட்டன. முன்னர் எதிர்பார்க்கப்பட்ட காலத்திற்கு முன்பே தன்னாட்சி வழங்கத்தீர்மானிக்கப்பட்டது. எனவே, பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின் தன்னாட்சி வழங்கப்படும் என்று பிரித்தானியாவால் அறிவிக்கப்பட்டது.
1. இலங்கை அரசின் மேல் உள்ள தனது ஆதிக்கத்தைக் கைவாங்க பிரித்தானியப் பாராளுமன்றம் உரிய சட்டத்தை உருவாக்க வேண்டும்.
2. சோல்ஃபெரி அரசியல் யாப்பில் குறிப்பிட்ட தன்னாட்சி சம்பந்தமான நடவடிக்கைகளை எடுக்க முட்டுக்கட்டைகளாக விளங்கும் வரையறைகள் சகலதையும் இல்லாதாக்க பிரித்தானியாவில் ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்.
3. பிரித்தானியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்று கலந்து பேசி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதன் பொருட்டு கடல் தொடர்பான, தரைதொடர்பான, ஆகாயந் தொடர்பான சில இலங்கைத் தளங்களைப் பிரித்தானியாவின் பாவிப்பிற்குக் கொடுத்துதவ வேண்டியிருந்தது.
4. வெளிநாட்டு உடன்படிக்கை மூலம் இலங்கையை ஒரு சுதந்திர நாடாகக் கணித்து, மதித்து, அந்நாடு தனது சொந்த வெளிநாட்டுத் தூதுவர்களை நியமிக்க வழிவகுத்துக் கொடுக்க வேண்டும். அதேநேரம் பிரித்தானியாவும் இலங்கையும் பிறநாடுகள் சம்பந்தமான தமது தொடர்புபற்றிய விபரங்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
5. பிரித்தானிய அரசினால் நியமிக்கப்பட்ட உள்ளூர் அலுவலர்களைத் தொடர்ந்து அதே அடிப்படையில் வைத்திருக்கவோ அல்லது அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஊதியங்களைக் கொடுத்து அவர்களை ஓய்வு பெறச்செய்யவோ தேவையான நடவடிக்கைகளை எடுப்பது. உரியகாலத்திற்கு முன் ஓய்வு பெற வைப்பதானால் அவர்களுக்குத் தக்க நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.
மேற்கண்ட இடைநிலை நடவடிக்கைகளை அவதானிக்கும் போது ஆக்கிரமிப்பால் அந்நியர் ஆட்சிக்குட்பட்ட ஒருநாடு, அதிகாரக் கைமாற்றலுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அதனை அந்நாடு பெறும்போது எப்பேர்ப்பட்ட சிக்கலான நடவடிக்கைகளுக்கு அது முகங் கொடுக்க வேண்டும் என்று புரிகிறது அல்லவா? அடித்துப் பறிக்கும்போது அப்படி எல்லாம் நடக்கவில்லை. ஆனால் அமைதியாக அதிகாரத்தைத் திரும்ப ஒப்படைக்கும் போது பல விடயங்களையுங் கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் தான் இன்றைய அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் பல சிக்கல்களை எதிர் நோக்கியுள்ளது. இதனால்தான் போலும் எங்கள் அரசாங்கமும் தற்போது "அடித்துப் பிடித்தால் என்ன?" என்ற கட்டத்திற்கு வந்துள்ளது. ஆகவே மொத்தத்தில் பயங்கரவாதந்தான் பதில் என்று இருசாராரும் வன்முறையை நாடியுள்ளனர். வன்முறையை நாடுபவர் யாராக இருந்தாலும் அவர் மனதில் பயங்கரவாதமே உந்துகோலாக இருந்து உதவி புரிந்து வருகிறது. மற்றவரைப் பயத்துக்குட்படுத்தித் தனது இலக்கை அடைய விழைவதே பயங்கரவாதம். இதில் ஒரு சாரார் மற்றவரைப் பயங்கரவாதிகள் என்று இன்று அழைப்பது தான் 21 ஆம் நூற்றாண்டின் அதி சிறந்த விசித்திரம்! அமெரிக்கா எங்களுக்குக் கற்றுக் கொடுத்த தலைசிறந்த சூத்திரம். நான் அடித்தால் ஜனநாயகவாதம் நீ அடித்தால் பயங்கரவாதம்!
ஐந்து நிபந்தனைகளும் ஏற்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் பின்னர் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி நான்காம் திகதி இலங்கையானது பிரித்தானியப் பொதுநலவாய நாடுகளின் ஒரு அங்கத்துவ நாடாக அதன் சம்மதத்துடன் மாறியது. நானூறு வருட அந்நிய ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் அதிகாரம் இலங்கைமக்களிடங் கையளிக்கப்பட்டது என்றால் அது வெறும் வாய்ப்பேச்சே. அதிகாரம் ஒரு குறிப்பிட்ட குழுவினரிடமே கையளிக்கப்பட்டது. அவர்களே இதுவரை மாறி மாறி அதிகாரத்தைப் பிரயோகித்து வந்துள்ளனர். ஆனால் இந்நாட்டின் பாரம்பரியங்களை உணர்ந்து, அதன் உண்மையான வரலாற்றினை ஏற்று, தற்கால மக்களின் பிரச்சினைகளை விளங்கி, வருங்காலத்தில் நாட்டை விருத்தியடையச் செய்யவேண்டும் என்ற நாட்டுப் பற்றுடன் அவர்கள் இதுவரை நடந்து வந்துள்ளார்களா என்றால் சாதகமான பதிலை எதிர்பார்க்க முடியாதிருக்கின்றது. முதல் ஆளுநர் நாயகமாக சேர் ஹென்றி மொங்க் - மேசன் மூர் பிரித்தானிய அரசினால் நியமிக்கப்பட்டார்.
தன்னாட்சி கிடைத்ததாகப் பல இலங்கையர் மார்தட்டிப் புதிய அதிகார மாற்றத்தை எதிர்கொண்டிருப்பினும் அதிகார மாற்றம் ஒரு சிங்கள மக்கட் குழுவுக்கும் பிரித்தானிய குடியேற்றக் காரியாலய அலுவலர்களுக்கும் இடையிலான ஒரு கடுமையான பேரம் பேசலின் விளைவே என்றால் மிகையாகாது. சுதந்திரத்திற்காகப் போராடிய தமிழர்கள் மறக்கப்பட்டு ஆங்கிலேயர் நலவுரித்துகளும் சிங்கள மக்கள் நலவுரித்துகளுமே இப்பேரம் பேசலின்போது கவனத்திற்கு எடுக்கப்பட்டன. ஆங்கிலேயரிடந் தாமுந் தமிழரும் மற்றையோருங் கொடுத்துத் தாம் மட்டுமே திரும்பப் பெற்றுக் கொண்ட அதிகாரத்தைக் கைவிட அல்லது பகிர்ந்து கொள்ள சிங்கள அதிகாரக் குழுவினர்களுக்கு இதுவரை மனம் விடவில்லை. பேச்சில் எல்லாம் கொடுப்பது போல் பேசி மூச்சில் வஞ்சனையைச் சுமந்து கொண்டிருக்கின்றனர். கவீரனின் சட்டக்கல்லூரிச் சகபாடி சமசமாஜ ஆனந்தசங்கரி கூட இதை இப்பொழுது புரியத் தொடங்கியுள்ளார். வடகிழக்கு முப்பிரிவுகளுக்கு இப்பென்ன அவசரம் என்றுள்ளார். இந்திய இடை நுழைவுக்குச் சிங்கள இனவாதத்தின் பதிலடி இது என்பதை சிந்தித்து அறிந்து கொள்ளவேண்டும் நண்பர் அவர்கள்.
இலங்கைத் தமிழர் வாழ்க்கையில் நாம் அடுத்துப் பார்க்கப் போவது தான் ஒரு வேதனைக்குரிய விடயம். பேச்சில் ஒன்று மூச்சில் வேறொன்று வைத்திருந்த சிங்களத் தலைவர்களை அப்போதையத் தமிழ்த் தலைவர்கள் முற்றிலும் நம்பியது தான் வருத்தத்திற்குரியது. தமிழ்த் தலைவர்களில் ஒரு முக்கிய குறைபாடு இருந்து வந்துள்ளது. அவர்கள் தங்கள் கெட்டித்தனத்திற்கும் அறிவுக்கும் ஆற்றலுக்குஞ் சமனான அளவு புகழ்ச்சிக்கும் வீழ்ந்து விடக்கூடியவர்கள். அதுவும் இன்னொரு தமிழனிலும் பார்க்க "நீதான் உயர்ந்தவன்" என்றால் அந்தத் தமிழர் ஆழமான கிணற்றிலுங் குதிக்கத் தயாராகி விடுவார். ஏன் தன்னை இவ்வாறு மற்றவர்கள் புகழ்கின்றார்கள் என்று இவர்கள் சிந்திப்பதில்லை. எப்பொழுதுமே புகழ்ச்சியில் ஈடுபடுபவர்கள் தங்கள் சொந்த நன்மைக்காகவே அதில் ஈடுபடுகின்றார்கள் என்பதை நாம் மறத்தல் ஆகாது. இன்னொருவர் எங்களை வையும் போது வாளாதிருக்கலாம். ஏசும் போது ஏடாகூடமாக நடந்து கொள்ளலாம். ஆனால் புகழும் போது அதுவும் அளவுக்கு மீறிப்புகழும் போது உஷார் நிலையில் இருக்க வேண்டும். புகழ்கின்றவன் எங்காவது நம்மை மாட்டிவிடப் பார்க்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். புகழ்ச்சிக்கு வீழாத மனிதர்கள் இல்லை. ஆனால் யாழ்ப்பாணத் தமிழர்களின் மிகப்பெரிய பலகீனம் அதுதான். அப்படி என்ன நடந்தது என்று அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்.

அல்லற்படும் தமிழினத்தின் அவலங்களைப் போக்க ஆணித்தரமாகக் குரல் கொடுத்த மாமனிதர் குமார்

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது 07 ஆவது சிரார்த்த தினம் இன்றாகும். இலங்கைச் சரித்திரத்திலேயே ஒரு தமிழ்த் தலைவர் தமிழர்களுக்காக குரல் கொடுத்த காரணத்துக்காக சிங்களத் தீவிரங்களால் கொலை செய்யப்பட்டமை இதுவே முதற்தடவையாகும். அவர் கொலை செய்யப்படும் பொழுது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். மாபெரும் தலைவர் சட்ட வல்லுநர் மறைந்த ஜி.ஜி.பொன்னம்பலம் கி.இ அவர்களின் மறைவின் பின் அவரது மைந்தரான இவர் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று எல்லோரும் மெச்சத்தக்க வகையில் நடத்தி வந்தார்.
அப்போதைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அரசியற் கோட்பாடுகளை ஏற்று இலங்கை வாழ் தமிழர்களது பிரச்சினைகளைத் திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு தீர்வைக் கொண்டு வருவதற்கு எல்லா வழிகளிலும் செயற்பட்டார். இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நாமத்தை உச்சரிக்கவே யாரும் அஞ்சித் தயங்கிநின்ற வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதால் மட்டுமே தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட முடியும் என்ற யதார்த்தத்தை பகிரங்கமாக வெளிக் கொணர்ந்த பெருமை அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களையே சாரும். மேலும் தமிழர்களின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதையும் இலங்கையிலும் சர்வதேசத்திலும் ஆணித்தரமாக எடுத்துரைத்தவர் அமரர் குமார் அவர்களே. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையும் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனித உரிமை மீறல்களையும் சர்வதேசத்திற்கு வெளிக் கொணர்ந்த பெருமை அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களையே சாரும். இதற்காக இலங்கை வாழ் தமிழர்கள் அவருக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
அவரது இந்தக் கொள்கைகளால் அவரைக் கைது செய்யும் நோக்குடன் சந்திரிகா அம்மையாரின் அரசு இரகசியப் பொலிஸாரை அவரது வீட்டுக்கு அனுப்பி பல மணி நேரமாக விசாரணை செய்து அவரது வாக்கு மூலத்தைப் பெற்றது. செம்மணி புகழ் அம்மணி சந்திரிகா அம்மையார் தென்னாபிரிக்காவில் வைத்து "தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் அல்லர்" எனப் பேட்டியளித்த சம்பவத்தைக் கண்டித்த ஒரே தமிழ்த் தலைவர் குமாரே ஆவார். அவர் படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு சந்திரிகா அம்மையார் தொலைக் காட்சி ஒன்றில் விடுதலைப் புலிகளை கடுமையாகத் தாக்கிப் பேசி "புலிகளுக்கு ஆதரவாக இயங்குபவர்கள் கொழும்பில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என்ற கருத்தில் பேசியிருந்தார். மறுநாட்காலை குமார் தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு இனியும் தான் நீண்ட காலம் வாழ்வது கடினமென என்னிடம் கூறியிருந்தார். அவரின் கொலைக்கு சந்திரிகா அரசே பொறுப்பேற்க வேண்டும்.
குமார் பொன்னம்பலம் அவர்களது கொலைச் சம்பவத்தை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரியான பந்துல விக்கிரமசிங்க விசாரணை அறிக்கையையும் கொலையோடு சம்பந்தப்பட்டவர்களின் விபரத்தையும் 2000 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதமே ஜனாதிபதி சந்திரகாவிடம் கையளித்திருந்தும் அவர் எதுவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை,. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பல தடவைகள் நான் எனது கடுமையான வாதங்களை முன்வைத்திருந்தேன். தகுந்த தலைமையின்றி தமிழினம் அநாதையாக்கப்பட்டு படுமோசமான கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் அவ்விடத்தை நிரப்பக் கூடிய தலைமகன் குமார் பொன்னம்பலமாகவே இருந்தார். அதனையும் கருத்தில் கொண்டு தான் அவர் கொலை செய்யப்பட்ட போது தமிழீழத்தின் அதியுயர் விருதான "மாமனிதர்" என்ற பட்டத்தை தமிழீழ தேசியத் தலைவர் வழங்கிக் கௌரவித்தார்.
புலம் பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் ஆற்றிய தொண்டுகளால் அவர்களின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். இலங்கை அரசியல் சரித்திரம் எழுதும் போது ஜனநாயகக் கட்சிக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் (Democratic People's Alliance Manifesto) உருவாவதற்கு இவர் ஆற்றிய சேவை பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியதாகும். இந்த விஞ்ஞாபனத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தினேஸ் குணவர்தனாவின் மக்கள் ஐக்கிய முன்னணி, ஜே.வி.பி., முஸ்லிம் காங்கிரஸ், பல்கலைக்கழக மாணவர் முன்னணி முதலிய பல கட்சிகளும் சேர்ந்து உருவாக்கின. அதில் அனைத்து கட்சியினரும் கையெழுத்திட்டனர். இதை சிறிமாவோ அம்மையார் கைவிட்டிருக்காவிட்டால் தமிழர்களது பிரச்சினை அப்போதே தீர்க்கப்பட்டிருக்கும். 1985 ஆம் ஆண்டு முதல் அவர் இறக்கும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களுக்காக இலவசமாக வாதாடி அவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தார். தமிழ் இளைஞர்களுக்கு அவர் ஆற்றிய சேவை இதுவரையாரும் ஆற்றியதில்லை. அவர் இறந்த போது களுத்துறைச் சிறைச் சாலையில் கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டமை இதை நிரூபிக்கிறது. அவர் மறைவதற்கு சற்று முன் தேர்தலை எதிர் நோக்கி தமிழ்ப் பகுதிகளில் போட்டியிடுவதற்கு ஒரு பட்டியலைத் தயாரித்திருந்தார். இதுவும் அவரது கொலைக்குக் காரணமாக அமைந்திருக்கலாம். அவரைப் போல் இன்னொருவர் பிறக்கப் போவதில்லை.
மாமனிதர் அவர்கள் தன்னைப் பற்றிக் கூறும் போது பின்வருமாறு கூறினார். "நீ உனது உயிரைப் பற்றிப் பயப்பட்டால் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும், நீ வாயை மூடிக் கொண்டே வாழ வேண்டுமானால் அந்த வாழ்க்கையின் அர்த்தம் தான் என்ன? நான் ஒரு அடிமையாக வழந்து இனத் துவேசிகளும் ஆட்சியில் உள்ளவர்களும் கூறுவனவற்றிற்கு தலையாட்டிக் கொண்டிருக்க விரும்பவில்லை. அவர்கள் விரும்புவதை நான் ஏற்றுக் கொள்ள முடியாவிடில் அவர்கள் கூறுவது எனது நம்பிக்கைக்கு எதிராக அமைந்தால் நான் ஏன் எனது மனச் சாட்சிக்கு எதிராக மௌனம் சாதிக்க வேண்டும்"
அவர், தான் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார் என்பதற்கு சுவர்ணவாகினியில் பின்வருமாறு கூறினார். "தமிழர் அரசியல் நிலை என்ன என்பதை ஒரு சந்தர்ப்பத்தில் நான் ஆராய்ந்து பார்த்தேன். ஒரு புறம் பயங்கரமான சிங்கள அரசும் மறு புறம் ஒரு சதமும் பெறுமதியற்ற தமிழ்க் குழுக்களும் பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். அவர்கள் சிங்கள அரசுக்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்கி வந்தனர். எக் காரணத்தை முன்னிட்டு அவ்வாறு ஆதரிக்கிறார்கள் என்பதை நீங்கள் அவர்களிடம் கேட்டு அறியுங்கள். அரசு அவர்களுக்கு பாதுகாப்பும் தனிப்பட்ட உதவிகளும் செய்கிறது. இத்தகைய சூழலில் தமிழ் மக்களின் அபிலாசையை முன்னெடுத்துச் செல்லும், தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளே என்று எனக்குத் தோன்றியது. அவர்கள் ஒரு புறம் போராடிக் கொண்டு மறு புறம் அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையிலேயே நான் புலிகளை ஆதரிக்கிறேன்" என்றார்.
நான் சட்டத் தொழில் ஆரம்பித்த காலம் முதல் அவர் இறக்கும் வரை அவருடன் சேர்ந்தே பணியாற்றி வந்தேன். ஒரே குடும்ப அங்கத்தவர்களைப் போல் என்னுடன் பழகிவந்த குமார் பொன்னம்பலம் அவர்களின் மறைவிற்குப் பின் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியை நான் ஏற்று நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நானும் எனது கட்சியும் இவரது கொள்கையைத் தொடர்ந்தும் பின்பற்றுதல் அவரது ஆத்மாவுக்கு நாம் அளிக்கும் ஆறுதல் என்றே கருதுகிறேன்.
அல்லற்பட்ட தமிழினத்தின் அவலங்களைப் போக்கி அவர்களுக்காக ஆணித்தரமாகக் குரல் கொடுத்த ஆண்மகனின் குரல்வளை நசுக்கப்பட்டது. தமிழர்கள் ஒரு தலைவனை இழந்தனர். தமிழர்களுக்காக தன்னையே தியாகம் பண்ணி இந்தத் தரணியிலே அமரர் குமார் பொன்னம்பலம் அவர்கள் செய்த தொண்டுகளெல்லாம் தமிழர் தம் சரித்திரத்தில் நிலைத்திருக்கும். மறைந்தும் மறையாத அமரரின் புகழ் நீடு வாழி. அவரது 07 ஆவது சிரார்த்த தினமாகிய இன்றைய நாளில் அவனியிலே தமிழர்களுக்கு இனிமேலாவது ஓர் ஆறுதல் கிட்ட வேண்டும், அதற்கு அமரர் குமார் பொன்னம்பலத்தின் ஆத்மா ஆசி வழங்கட்டும்.